ஜெர்மனியில் உள்ள ஒரு பிச்சைக்காரர் ஒருவருக்கு மூன்று கல்லூரி மாணவர்கள் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இந்த சுவாரசிய நிகழ்ச்சி குறித்த செய்தி பின்வருமாறு:

ஜெர்மனியில் வீடில்லாத ஒரு ஏழை தெருவில் உட்கார்ந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். அவரிடம் இருந்த சொத்து ஒரே ஒரு பிளாஸ்டிக் வாளி மற்றும் சில துணிமணிகள். அவருக்கு இரக்கப்பட்டு சிலர் போடும் பிச்சைக்காசுகளை வைத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரை அணுகிய ஒரு கல்லூரி மாணவர், அவர் வைத்திருக்கும் வாளியை சிறிது நேரம் கொடுக்க முடியுமா என்று கேட்டுள்ளார். 



பிச்சைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. சரியென்று தன்னுடைய வெள்ளை நிற பிளாஸ்டிக் வாளியை அந்த கல்லூரி மாணவரிடம் கொடுத்தார். அதை வாங்கிய கல்லூரி மாணவர் அங்கேயே அவரருகே உட்கார்ந்து அதை டிரம் போல உபயோகித்து தாளம் போட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவருடைய நண்பர்கள் இருவர் அவருடன் இணைந்து பாட்டு ஒன்றை பாட ஆரம்பித்தனர்.

அவர்களுடைய பாட்டையும் இசையையும் அந்த பகுதி வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் நின்று ரசிக்க தொடங்கினர். அதோடுமட்டுமில்லாமல் அந்த பிச்சைக்காரரின் தொப்பியில் பணத்தை போடவும் தொடங்கினர். பாட்டு முடிந்ததும் பிச்சைக்காரர் எதிர்பாராத அளவுக்கு அந்த தொப்பியில் பணம் சேர்ந்துவிட்டது. அதன்பின்னர் அந்த கல்லூரி மாணவர்கள் பிச்சைகாரரிடம் வாளியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர். சில நிமிடங்களில் கைநிறைய கிடைத்த பணத்தை பார்த்ததும் அந்த பிச்சைக்காரருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.


Post a Comment

 
Top