இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கடந்த 2012ஆம் ஆண்டு 'நான்' என்ற திரைப்படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் ஹீரோ பெயரான சலீம் என்ற பெயரில் இரண்டாவது படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்த திரைப்படம் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென படத்தில் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் திருநாளில் 'சலீம்' ரிலீஸாகும் என விஜய் ஆண்டனி இந்த படத்தின் பாடல் வெளியீட்டின்போது அறிவித்திருந்தார். ஆனால் கடந்த 17ஆம் தேதி வெளியான தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி' மற்றும் 'சதுரங்க வேட்டை' ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸாகி பத்து நாட்களையும் தாண்டி ஹவுஸ்புல் காட்சிகளாக பெரும்பாலான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் தியேட்டர் அதிபர்கள் 'சலீம்' படத்திற்கு தியேட்டர் ஒதுக்க மறுத்துவிட்டனர். இதே காரணத்திற்காகத்தான் சித்தார்த் நடித்த ஜிகர்தண்டாவும் கடந்த வாரம் ரிலீஸாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே விஜய் ஆண்டனி ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அஞ்சான் பெருவாரியான தியேட்டர்களில் ரிலீஸாக இருப்பதால் 'சலீம்' ஒருவாரம் மட்டுமே தியேட்டரில் ஓடும் என தெரிகிறது. தனுஷ் மற்றும் சூர்யா படங்களினால் தனது படத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் விஜய் ஆண்டனி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment